பிரபல ஹெக்கிங் குழுவான ‘எனோன்யமஸ்’ கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்களை தாக்கியதாக ‘எனோன்யமஸ்’ தெரிவிக்கின்றது.
இஸ்ரேலிய பொலிஸ், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவு உள்வாங்கல், புள்ளிவிபரவியல் உட்பட பல துறைகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக ‘எனோன்யமஸ்’ தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் கடந்த சில தினங்களாக செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையும் தாமே முடக்கியதாக ‘எனோன்யமஸ்’ தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளது.
‘எனோன்யமஸ்’ வெளியிட்டுள்ள தகவலின் படி 100,000 இஸ்ரேலிய இணையத்தளங்களும், 40,000 பேஸ்புக் கணக்குகளும், 30,000 வங்கிக்கணக்குகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இஸ்ரேலுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனினும் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளதுடன் தனது முக்கிய வலையமைப்பினுள் புகுந்து அதனை முடக்கும் அளவுக்கு ‘எனோன்யமஸ்’ திறன்வாய்ந்ததில்லையென தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் அதாவது ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போதும் ‘எனோன்யமஸ்’ அதன் இணையத்தளங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஹெக்கிங் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment